நாயிடம் சிக்கிய தம்பதி…
சென்னை அருகே நள்ளிரவில், சினிமாவில் போல், ராட்வீலர் நாயை ஏவி விட்டு முதியவரை கடிக்க வைத்து, அவரை அரை நிர்வாணமாக்கி அலற விட்டு அட்டூழியம் செய்தவரின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை:
சென்னை புழல் அடுத்த புத்தகரம் ராஜம்மாள் நகரை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 72).அவர், இரண்டு நாட்களுக்கு முன், இரவு, 11:00 மணி அளவில், தன் வீட்டு வாசலில் அமர்ந்திருந்தார்.
அப்போது, அதே பகுதியை சேர்ந்த ஒருவர், அவர் வளர்க்கும், ‘ராட் வீலர்’ நாயுடன் வாக்கிங் சென்றார்.அதைக்கண்ட மாரியப்பன், இது குறுகலான முட்டுச்சந்து, இங்கே இவ்வளவு பெரிய நாயை அழைத்து வந்தால் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் என்னாவது என கேட்டிருக்கிறார்.
அதனால், அந்த நபருக்கும், மாரியப்பனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.ஆத்திரமடைந்த அந்த நபர், ராட்வீலர் நாயை ஏவி விட்டு, மாரியப்பனை கடிக்க செய்திருக்கிறார்.
நாய் துரத்தி துரத்தி கடித்துள்ளது. அப்போது, அவரது வேட்டி அவிழ்ந்தது. ஆவேசமாக கடித்த நாயிடம் இருந்து தப்பிக்க, அரைநிர்வாண கோலத்தில், அலறியபடி, தடுமாறி ஓடியிருக்கிறார்.அவரது அலறல் சத்தம் கேட்டு, அவரது மனைவியும், அக்கம்பக்கத்தல் உள்ளவர்களும் வெளியே வந்து பார்த்தனர்.
நிலைமையை அறிந்து, அவரை காப்பாற்ற முயன்றனர்.அந்த நாய் அவர்களையும் விரட்டி கடித்தது. ஆனாலும், அவர்கள் மாரியப்பனை நாயிடம் இருந்து மீட்டனர்.நாயின் உரிமையாளரிடம் விசாரித்த போது, நான் வழக்கறிஞர். என்னை எதிர்த்தால் இப்படித்தான் நடக்கும் என, மிரட்டிவிட்டு, நாயை அழைத்து சென்றுவிட்டார்.
வளர்ப்பு நாயை, வெளியே அழைத்து சென்றால், அதன் வாய்க்கு, ‘கவசம்’ அணிவிக்க வேண்டும் என, சென்னை மாநகராட்சி அறிவித்திருந்தும், இந்த அட்டூழியம் அரங்கேறி இருக்கிறது.இது குறித்து, மாரியப்பன், புழல் காவல் போலீசில் புகார் செய்தார். போலீசார் அந்த நபர் குறித்து விசாரிக்கின்றனர்.
தற்போது, அந்த சம்பவம் பற்றிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.அதனால், பொதுமக்கள் அச்சத்திற்கு ஆளாகி உள்ளனர்.
மேலும், புழல், சூரப்பட்டு புத்தகரம், விநாயகபுரம் சுற்று வட்டரங்களில், தெருநாய்களும் அதிகரித்துள்ளன. அவையும் பொது மக்களை அச்சுறுத்துகின்றன. மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியம் செய்யாமல், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
youtube : https://youtu.be/cYmW2GH4JE4
facebook : https://www.facebook.com/share/p/16EALV2LWS/
instagram : https://www.instagram.com/p/DH8qor7ym_j/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==
