மீண்டும் கேப்டன் பிரபாகரன் ரசிகர்கள் செம்ம உற்சாகம்…
சென்னை:

கேப்டன் விஜயகாந்த் படம், மறு வெளியீடாக ரிலீசாவதால், அவருடைய ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
கடந்த மார்ச் மாதம், 27ம் தேதி, நம்ம செய்தி சேனலில், ‘கேப்டனை சந்திக்க ரசிகர்கள் ஆசை’ என்ற தலைப்பில், அவரது படங்களை மறுவெளியீடாக திரையில் பார்த்து ரசிக்க விரும்பும் தகவல், சிறப்பு செய்தியாக வெளியானது.
இந்த நிலையில், அவரது, கேப்டன் பிரபாகரன் படம், 34 ஆண்டுக்கு பிறகு, நவீன தொழில் நுட்ப அம்சங்களுடன்,
500 தியேட்டர்களில் மறு வெளியீடாக ரிலீசாக உள்ளது.
ஒவ்வொரு ஹீரோவுக்கும், அவர்களது திரையுலக பயணத்தில், ஏதாவது ஒரு படம் ‘மைல்கல்லாக’ அமையும். அப்படித்தான் மறைந்த புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த்திற்கு, கேப்டன் பிரபாகரன்’ படம் மணி
மகுடமாக அமைந்தது.
கேப்டன் ரசிகர்கள் மட்டுமல்ல அனைத்து தரப்பு ரசிகர்களையும் அந்தப்படம் ஈர்த்தது.மேலும், பல ஹீரோக்களுக்கு அவர்களது நூறாவது படம் வெற்றி பெறுவது சவாலான விஷயமாகும்.
உலக நாயகன் கமலின் 100 வது படம் ராஜபார்வை. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின், 100 வது படம் ஸ்ரீ ராகவேந்திரர். அவை நல்ல படங்கள் என்றாலும், வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை.
ஆனால் விஜயகாந்த்தின், 100 வது படமான, ‘கேப்டன் பிரபாகரன்’ வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றது.அது மட்டுமல்ல, காலத்திற்கும் நிலைக்கும் விதமாக, அவரது பெயருக்கு முன்பாக, ‘கேப்டன்’ என்ற அடைமொழியானது.
கேப்டன் பிரபாகரன் கொடுத்த வெற்றியின்
நினைவாக, அவர் தனது மூத்த மகனுக்கு விஜய பிரபாகரன் என, பெயர் வைத்து மகிழ்ந்தார்.
இத்தனை பெருமை வாய்ந்த படம் வெளியாகி, 34 வருடங்கள் நிறைவு பெற்ற நிலையில், அதை கொண்டாடும் விதமாக விரைவில் மிகப்பிரமாண்டமாக, மறுவெளியீடாகரிலீஸ் ஆகிறது.
இந்தப்படத்தை, பிலிம் விஷன் கம்பெனியின் ராமு, 4K தரம் மற்றும் மற்றும் 7.1 சவுண்ட் மிக்ஸிங் என டிஜிட்டல் முறையில் ரீமாஸ்டர் செய்து கொடுத்துள்ளார்.இந்தப்படம், தமிழகமெங்கும் சுமார் 500 திரையரங்குகளில் வெளியாக உள்ளது.முருகன் ஃபிலிம் பேக்டரி மற்றும் ஸ்பேரோ சினிமாஸ் சார்பாக, கார்த்திக் வெங்கடேசன் படத்தை மறுவெளியீடாக ரிலீஸ் செய்கிறார்.
இந்தப்படம், 1991 ஏப்ரல் 14ஆம் தேதி, தமிழ் புத்தாண்டு தினத்தில் ரிலீஸானது. ஐ.வி. சினி புரடக்சன்ஸ் சார்பில், அ.செ. இப்ராஹிம் ராவுத்தர் இந்த படத்தை தயாரித்தார். கேப்டன் விஜயகாந்த்துக்கு புலன் விசாரணை என்கிற சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்த கையோடு தனது இரண்டாவது படமாக, கேப்டனின் 100வது படமாக இந்த படத்தை மிக பிரம்மாண்டமாக இயக்கினார் இயக்குநர் ஆர்.கே செல்வமணி. பிரமாண்டம் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என படமாக மட்டும் எடுக்காமல், அவருக்கு பின்வந்த படைப்பாளிகளுக்கு இந்தப்படம் மூலம் ஒரு பாடமே எடுத்திருந்திருந்தார் இயக்குநர் ஆர்கே.செல்வமணி.
ஒரு படத்திற்கு எல்லாமும் சரியாக அமைந்து விடும் என்பது போல, இந்த படத்திற்கு இசைக்கு இசைஞானி இளையராஜா, ஒளிப்பதிவு ராஜராஜன், வசனங்களுக்கு லியாகத் அலிகான், அறிமுக மிரட்டல் வில்லனாக வீரபத்ரன் கதாபாத்திரத்தில் மன்சூர் அலிகான், ரூபிணி, ரம்யா கிருஷ்ணன் மற்றும் லிவிங்ஸ்டன் என பலரும் நடித்துள்ளனர்.
இந்தப்படம் மூலம் தங்களது திரையுலக பயணத்தில் திருப்புமுனை பெற்றவர்கள் பலர்.
இசைஞானி இளையராஜாவின் இசையில் இந்த படத்தில் இடம்பெற்ற பாசமுள்ள பாண்டியரே என்கிற பாடலும் ஆட்டமா தேரோட்டமா என்கிற பாடலும் இன்றைக்கும் ஒவ்வொரு ஊரிலும் திருவிழாக்களிலும் விசேஷ வீடுகளிலும் தவறாமல் இடம் பிடிக்கும் கொண்டாட்ட பாடல்களாக அமைந்து விட்டன. அதுமட்டுமல்ல காட்சிக்கு காட்சி, பின்னணி இசையிலும் மிரட்டி இருந்தார் இசைஞானி. குறிப்பாக புரட்சிக் கலைஞர் விஜயகாந்தின் அறிமுகக் காட்சி, அவர் காடுகளுக்குள் பயணிக்கும் காட்சி, வீரபத்ரன் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு என குறிப்பிடத்தக்க பிரத்யேக பின்னணி இசையை படம் முழுக்க கையாண்டு பிரமிக்க வைத்திருந்தார்..
இந்த படத்திற்கு கிடைத்த இன்னொரு பலம் ஒளிப்பதிவாளர் ராஜராஜன். தனது ஒளிப்பதிவில் மேற்குத் தொடர்ச்சி மலையை, அதன் அடர்ந்த காடுகளை பிரம்மாண்ட வனப் பரப்புகளை, பிரமிக்க வைக்கும் ரயில் சண்டை காட்சிகளை என எதை பாராட்டுவது என்று திகைத்துப் போகும் அளவிற்கு படம் முழுக்க ஒரு அழகியல் பாடம் எடுத்திருந்தார் என்று சொல்லலாம்,
லியாகத் அலிகானின் அனல் பறக்கும் அரசியல் வசனங்கள், அதை கேப்டன் விஜயகாந்த் பேசும்போதும் சரி, ஒரு அறிமுக நடிகரான மன்சூர் அலிகான் பேசும்போதும் சரி தியேட்டர்களில் ரசிகர்களின் கைதட்டல் பறந்தது. படம் வெளியான சமயத்தில் இந்த வசனங்களுக்காகவே ஆடியோ கேசட்டுகள் வெளியிடப்பட்டு லட்சக்கணக்கில் விற்பனை செய்து சாதனை படைத்தது என்பது இன்னொரு வரலாறு.
இந்த படத்தின் சிறப்பே 90களில் மட்டுமல்ல இன்றைக்கு இருக்கும் 2K இளைஞர்கள் பார்த்தாலும் கூட இப்படி ஒரு பிரம்மாண்ட படத்தை எப்படி அப்போது எடுத்தார்கள் என பிரமிக்க வைக்கும் விதமாக இயக்குநர் ஆர்.கே செல்வமணி படத்தை அங்குலம் அங்குலமாக செதுக்கி இருந்தார் என்றே சொல்ல வேண்டும். இன்று செம்மர கடத்தல் பின்னணியில் உருவான ‘புஷ்பா’ படத்தை கொண்டாடும் இளைஞர் கூட்டம், ‘கேப்டன் பிரபாகரன்’ படத்தை பார்த்தால் புஷ்பாவுக்கு எல்லாம் முன்னோடியாக அப்போதே இப்படி விஜயகாந்த் நடிப்பில் கேப்டன் பிரபாகரன் என்கிற ஒரு அதிரடி படம் கொடுத்திருக்கிறார்களே என்கிற ஆச்சரியம் காட்சிக்கு காட்சி அவர்களுக்கு ஏற்படும்.
அந்த வகையில் ஆந்திராவுக்கு இப்போது ஒரு ‘புஷ்பா’ என்றால் தமிழ்நாட்டுக்கு அப்போதே ஒரு ‘கேப்டன் பிரபாகரன்’
எனலாம்.
youtube link 1 : https://youtu.be/Oww23w1OCMI
youtube link 2 : https://youtu.be/L60vA3bBcgw?si=vGGDGTG00aYyKqun
