கேப்டனை பார்க்க வேண்டும் விஜயகாந்த் ரசிகர்கள் ஆசை
கேப்டன் விஜயகாந்த்தின் ரசிகர்கள் மட்டுமின்றி தமிழக ரசிகர்கள் அனைவரும், மீண்டும் விஜயகாந்தை திரையில் பார்த்து ரசிக்க வேண்டும் என, தங்களது நீண்ட நாள் ஆசையை வெளிப்படுத்தி வருகின்றனர்.
தமிழ்த்திரை உலகத்தினராலும், அவரது ரசிகர் மற்றும் தொண்டர்களாலும், கேப்டன் என அன்போடு அழைக்கப்படும் நடிகர் விஜயகாந்த், கடையநல்லூர் எம்.ஏ.காஜா தயாரிப்பில் வெளியான, இனிக்கும் இளமை படத்தில், நடிகராக அறிமுகமானார்.
அதை தொடர்ந்து எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் சட்டம் ஒரு இருட்டறை, துரை இயக்கத்தில் தூரத்து இடி முழக்கம், ஆர்.சுந்தர்ராஜன் இயக்கத்தில் வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோவில் கிழக்காலே, பாலு ஆனந்த டைரக்ஷனில் நானே ராஜா நானே மந்திரி, ராமநாராயணன் இயக்கத்தில் சிவப்புமல்லி மற்றும் திரைப்பட கல்லூரி மாணவர்கள் ஆபாவாணன்-அரவிந்தராஜ் கூட்டணியில் ஊமை விழிகள், அதன் பிறகு, உழவன் மகன், செந்தூரப்பூவே, புலன் விசாரணை, செந்தில்நாதன் டைரக்ஷனில் பூந்தோட்டக்காவல்காரன், ஆர்.வி. உதயகுமார் இயக்கத்தில் சின்னக்கவுண்டர், வானத்தைப்போல, மணிவண்ணன் டைரக்ஷனில் நூறாவது நாள் உள்ளிட்ட, 154 நேரடி தமிழ்ப்படங்களில் மட்டும் நடித்தார்.
அவருக்கு வாய்ப்புகள் வந்தும், தமிழ்மொழி மீதுள்ள பற்று காரணமாக, வேறு மொழி படங்களில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.அவரது படங்களில், சந்தன வீரப்பன் பற்றிய கதை அம்சத்துடன் பிரம்மாண்டமாக உருவான, 100 வது படமான கேப்டன் பிரபாகரன், மாபெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் அவர், நடிகர் திலகம் சிவாஜியுடன் ‘வீரபாண்டி’ படத்திலும், உலகநாயகன் கமலுடன் ‘மனக்கணக்கு’ படத்திலும், ரஜினியுடன் ‘மனதில் உறுதி’ வேண்டும் படத்திலும் நடித்தார்.
அவரது ஆண்டாள் அழகர் பிலிம்ஸ், ராவுத்தர் பிலிம்ஸ் சார்பில், பல வெற்றிப்படங்கள் தயாரிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.அவர் நடிகர் சங்கத்தலைவராக இருந்த போது, சிங்கப்பூர், மலேசியா நாடுகளில், கலை விழாக்கள் நடத்தி, நடிகர் சங்க கடனை அடைத்தது, தன்னை வளர்த்த தமிழ் திரை உலகிற்கு, அவர் செய்த நன்றிக்கடனாகும்.
மேலும், முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு, அவரது கலை, அரசியல் சாதனைகளுக்காக, சென்னை மெரீனா கடற்கரையில், தமிழ் திரை உலகம் சார்பில் பாராட்டு விழா நடத்தி, தங்கப்பேனா பரிசளித்தார்.திரை உலகில் சாதித்த விஜயகாந்த், அதை தொடர்ந்து, 2005ம் ஆண்டு, தேசியமுற்போக்கு திராவிட கழகம் என்ற பெயரில் கட்சி துவக்கி, பலத்த வரவேற்புடன் அரசியல் களம் கண்டார்.
அதன் பிறகு, விருத்தாச்சலம், ரிஷிவந்தியம் தொகுதிகளில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ., வாக செயல்பட்டார்.அதை தொடர்ந்து, 2011ல், நடந்த சட்டசபை தேர்தலில், ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க., வுடன் கூட்டணி வைத்து, 29 தொகுதிகளில் வெற்றி பெற்று, சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவரானார்.
விதிவசத்தால், உடல் நலம் குன்றிய அவர், 2023ம் ஆண்டு, டிசம்பர், 28ம் தேதி மண்ணுலகை விட்டு மறைந்தார்.அவரது மறைவிற்கு பின், அவரது ரசிகர், தொண்டர்கள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழக மக்களும்ஒட்டுமொத்த மரியாதை செலுத்துவது, மறக்க முடியாத நெகிழ்ச்சியான நினைவுகளாகும்.
அதனால், இன்றும் அவரது படங்களை, டிவியிலும், ரீல்ஸ்சாகவும் கண்டு ரசிக்கின்றனர்.கடந்தாண்டு வெளியான தளபதி விஜய் நடித்த, ‘கோட்’ படத்தில், Ai தொழில்நுட்பம் மூலம், கேப்டன் விஜயகாந்த் இடம் பெற்ற காட்சிகளை, ரசிகர்கள் ஆரவாரமாக ரசித்து வரவேற்றனர்.
அதே போல் நனிகர் அட்டக்கத்தி தினேஷ், ஹரீஷ் கல்யாண் நடித்த லப்பர் பந்து படத்தில், அடிக்கடி இடம் பெறும், “நீ பொட்டு வச்ச தங்க குடம் ஊருக்கு நீ மகுடம்…” பாடலிலும், விஜயகாந்தை நினைவு கூர்ந்து ரசித்து மகிழ்ந்தனர்.இந்த நிலையில், பத்துப்பதினைந்து ஆண்டுக்கு முன், வெளியாகி வெற்றி பெற்ற படங்கள், தற்போது மறுவெளியீடாக திரையிடப்பட்டு, வரவேற்பை பெறுகின்றன.
அதே போன்று 80-90 களில் வெளியான படங்களும், மறு வெளியீடாக திரைக்கு வந்து, இப்போதும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.ரஜினி, கமல் ஆகியோரின் பிறந்த நாள் கொண்டாட்டமாக, அவர்கள் நடித்த பல படங்களும் மறு வெளியீடாக திரைக்கு வந்து செல்கின்றன.
ஆனால், இதுவரை கேப்டன் விஜயகாந்த்தின் எந்தப்படமும், மறுவெளியீடாக ரிலிசாகவில்லை என்பது, அவரது ரசிகர் மற்றும் தே.மு.தி.க., தொண்டர்கள் மட்டுமின்றி, தமிழ் ரசிகர்கள் அனைவருக்குமே ஆதங்கமாகவும், நிறைவேறாத நீண்ட நாள் விருப்பமாகவும் உள்ளது.அதனால், ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், தமிழ் திரை உலக தயாரிப்பு நிறுவனங்கள், வினியோகஸ்தர்கள் முன் வரவேண்டும்.
விஜயகாந்த்தின் ரசிகர்கள் கூறியதாவது;
கேப்டன் படங்கள் குடும்பத்துடன் பார்த்து, ரசிக்கும் வகையில், நல்ல பொழுதுபோக்கு படங்களாகத்தான் இருந்தன. அவர் படத்தின் மூலம் எந்த சர்ச்சையும் ஏற்பட்டதில்லை.
அவரது வெற்றிப்படங்களை, மீண்டும் திரையில் பார்த்து, ரசித்து கொண்டாட விரும்புகிறோம். அதனால் அவரது படங்கள் மறுவெளியீடாக மீண்டும் திரைக்கு வந்தால், அது அவருக்கு செய்யும் மரியாதையாக நினைத்து மகிழ்வோம் என்றனர்.
தமிழக ரசிகர்கள், கேப்டன் விஜயகாந்தை மீண்டும் திரையில் சந்திக்க வாழ்த்துவோம்.
youtube : https://youtu.be/L60vA3bBcgw
facebook : https://www.facebook.com/share/p/16AmVoogpB/
instagram : https://www.instagram.com/p/DHsavVAxFn_/?utm_source=ig_web_copy_link
