மீண்டும் காமெடி கலாட்டா

பாஸ் என்கிற பாஸ்கரன் படம், தொழில்நுட்ப மாற்றங்களுடன், 15 ஆண்டுக்கு பிறகு, மீண்டும் மறுவெளியீடாக , வெளியாக உள்ளது.
இப்போதெல்லாம், மறு வெளியீடு செய்கிற படங்களும் வெற்றி பெறுவது குறிப்பிடத்தக்கது.
என்னதான் ஆக்சன் படங்கள் , திகில் படங்கள் வந்தாலும், கலகலப்பான காமெடி படங்களுக்கு, தமிழ் ரசிகர்களிடம், நல்ல வரவேற்பு கிடைப்பதை மறுக்க முடியாது.
இப்போது அப்படிப்பட்ட படங்கள் வராதது தான் ஒரு குறையாக உள்ளதே தவிர, அந்தப் படங்களுக்கான எதிர்பார்ப்பு நிறையவே இருக்கிறது.
அதற்கு உதாரணமாக வெளியாகி, வெற்றி பெற்றதுதான் ‘மத கஜ ராஜா’ திரைப்படம். அதுவும் தயாரிக்கப்பட்டு, 10 ஆண்டுக்கு பிறகு வெளியாகி, கமர்ஷியலாக பெரிய வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
அப்படிப்பட்ட கலகலப்பான படங்களுக்கான எதிர்பார்ப்பு, எப்போதும் குறையாது என்பதுதான் உண்மை. 
2010 இல் வெளியாகி பெரும் வரவேற்பையும், வசூல் சாதனையும் பெற்ற படம் பாஸ் என்கிற பாஸ்கரன்.
ஆர்யா, நயன்தாரா, சந்தானம், ஜீவா, விஜயலட்சுமி, சித்ரா லக்ஷ்மணன், ஷகிலா, மொட்டை ராஜேந்திரன், சுப்பு பஞ்சு, அஸ்வின் ராஜா, சுவாமிநாதன் மற்றும் பலர் நடித்த இந்தப் படம், வசூலில் சக்கைப்போடு போட்டது.
இப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் நா. முத்துக்குமார் எழுதிய அனைத்துப் பாடல்களுமே பெரிய வெற்றி பெற்றன.
நடிகர் சந்தானத்தின் ‘நண்பேன்டா’ வசனம் பட்டி தொட்டி எங்கும் வைரலானது. அதே நண்பேன்டா என்ற பெயரில் ஒரு படமே வந்தது என்றால், அந்த வசனத்தின் ஈர்ப்பை தெரிந்து கொள்ளலாம். அது மட்டும் அல்லாமல் விஜய் மற்றும் அஜித் ரசிகர்களை தூண்டிவிடும் விதமாக, சந்தானம் அந்தப் படத்தில் தல-தளபதி என்று பேசிய காமெடியும் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அது மட்டுமல்ல, ஆர்யா நயன்தாராவின் ரொமான்ஸ் காட்சிகள், சந்தானத்தின் நகைச்சுவைக் காட்சிகள், யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல்கள் என வணிக வெற்றிக்கான பல அம்சங்களும் அதில் இருந்தன. அப்படிப்பட்ட ‘பாஸ் என்கிற பாஸ்கரன் ‘படம் மீண்டும் தமிழ்நாடு முழுவதும் நவீன தொழில்நுட்பத்தின் மெருகேற்றலுடன் வெளியாகிறது.
இந்தப் படத்தை ராஜேஷ் எம் இயக்க, சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்திருந்தார். ராஜேஷ் இயக்கத்தில் உருவான ‘சிவா மனசுல சக்தி’ படம் கூட, மீண்டும் வெளியாகி பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் இப்போது ‘பாஸ் என்கிற பாஸ்கரன் ‘படமும் வெளியாக உள்ளது.
வாசன் விஷூவல் வென்ச்சர்ஸ் சார்பில், இப்படத்தை கே. எஸ். சீனிவாசன் தயாரித்திருந்தார். இப்போது குரு சம்பத்குமாரின்
அமிர்தா பிலிம்ஸ் நிறுவனம்
மீண்டும் மறுவெளியீடாக இதை வெளியிடுகிறது. சிறந்த பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட இந்தப் படம், தமிழ் ரசிகர்களுக்கு கோடைக்கால விருந்தாக, தமிழகம் முழுவதும், இம்மாதம் 21ம் தேதி வெளியாகிறது.
இந்தப்படம், 15 ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழகத்தில் 50க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
